Monday, March 14, 2011

American College Madurai



மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேற்று இருதரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.   மதுரை அமெரிக்கன் கல்லூரியை நிர்வாகம் செய்வதில் பிஷப் கிறிஸ்டோபர் ஆசிப் தரப்பிற்கும், முன்னாள் முதல்வர் சின்னராஜ் ஜோசப் தரப்பினருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.
 
இந்த போட்டியால் கடந்த 2 ஆண்டுகளாக கல்லூரியில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் சின்னராஜ் ஜோசப் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக பிஷப் தரப்பில் இருந்து புதிய முதல்வராக (பொறுப்பு) மோகன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
 
ஆனால் சின்னராஜ் ஜோசப்புக்கு தான் முதல்வர் பதவி கால நீட்டிப்பு செய்து தர வேண்டும் என்பதனை வலியுறுத்தி ஒரு தரப்பை சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
அதில் ஒரு பகுதியாக கடந்த 5 நாட்களுக்கு முன்பு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்திற்கு போட்டியாக பிஷப் தரப்பை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உண்ணும் விரதம் போட்டியை தொடங்கப் போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று காலை உண்ணும் விரதம் போராட்டம் தொடங்கியது.
 
இவர்கள் ஏற்கனவே உண்ணாவிரதம் இருந்து வரும் இடத்திற்கு, எதிரே உள்ள இடத்தில் உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கல்லூரி மாணவர்கள் மட்டும் கலந்து கொண்டனர். (மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் யாரும் கலந்து கொள்ள வில்லை.) இரு தரப்பு மாணவர்களின் போராட்டம் எதிர், எதிரே நடப்பதால், மோதல் ஏற்படலாம் என்று கருதி போலீசாரும் வரவழைக்கப்பட்டனர்.
 
இதற்கிடையில் உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பேசிய பேச்சுக்களுக்கு, உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் இரு தரப்பு மாணவர்களையும் சமரச பேச்சுவார்த்தைக்கு போலீஸ் நிலையம் வருமாறு அழைத்தார்.
 
அதனை ஏற்று கொண்டு, உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் போலீஸ் நிலையம் சென்றனர். உண்ணும் விரதம் மேற்கொண்ட மாணவர்கள் செல்ல வில்லை. சிறிது நேரத்தில் இன்ஸ்பெக்டரும், சில போலீசாரும் பேச்சுவார்த்தைக்காக போலீஸ் நிலையம் சென்று விட்டனர்.
 
அப்போது ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டரும், ஒரு போலீசார் மட்டும் பாதுகாப்பு பணியில் இருந்தனர். மதியம் சுமார் 12.30 அளவில் உண்ணும்விரதம் இருந்த மாணவர்களுக்கு ஒரு இடத்தில் வைத்து பிரியாணி பாக்கெட் வழங்கப்பட்டது.
 
அதை வாங்கி சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்தில் இரு தரப்பு மாணவர்கள் இடையே மோதல் வெடித்தது.   உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது திடீரென கற்கள் வீசப்பட்டன. இதனால் மாணவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் எழுந்து தலைதெறிக்க ஓடத் தொடங்கினர்.
 
சில மாணவர்களின் மண்டை உடைந்து ரத்தம் சொட்டியது. ஒரு கட்டத்தில் பேராசிரியர்களின் கார்களும், இருசக்கர வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. முன்னாள் முதல்வர் சின்னராஜ் ஜோசப்பின் வீட்டிற்கு சென்ற சிலர், அங்கிருந்த கார் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.   இதற்கிடையில் போலீஸ் படையும் அங்கு வந்தது.
 
அவர்கள் கல் எறிந்து கொண்டு இருந்த மாணவர்களை விரட்டினர். அதற்குள், உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் உண்ணும் விரதம் இருந்த மாணவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். போலீசாரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
 
இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.   இந்த மோதல் சம்பவத்தில் மாணவிகள் உள்பட மொத்தம் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
 
6 கார்களும், 20-க்கும் மேற்பட்ட வாகனங்களும் மோதலில் சேதமடைந்தன. மோதல் சம்பவம் தொடர்பாக போலீசார் 5 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
 

No comments:

Post a Comment